விடைத்தாள் நகல் அனுப்புவதில் தாமதம்; மறுமதிப்பீடுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா?
விடைத்தாள் நகல் அனுப்புவதில் தாமதம்; மறுமதிப்பீடுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா?
UPDATED : ஜூன் 11, 2026 01:34 PM
ADDED : ஜூன் 11, 2026 01:38 PM

சென்னை:
'தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு, விடைத்தாள் நகல் அனுப்பும் பணிகள் தாமதமாவதால், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களில், விடைத்தாள் நகல் கோருவோருக்கு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்துக்கான விடைத்தாள் நகல் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதனால், மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்ய உள்ளோர், தங்களின் இயற்பியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள்களுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க, 16ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் கிடைக்காத நிலையில், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க நாட்கள் நெருங்குவதால், மாணவர் மற்றும் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, பெற்றோர் சிலர் கூறியதாவது:
மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல் கிடைத்த பின், அதை ஆசிரியர்களிடம் கொடுத்து விளக்கம் கேட்பர். அவர்கள் அளிக்கும் யோசனையின்படி தான், மறுமதிப்பீடு அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பர். விடைத்தாள் நகலே கிடைக்காத நிலையில், வரும் 16ம் தேதிக்குள், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது, நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் நலன் கருதி, தேர்வுகள் இயக்ககம், விடைத்தாள் நகலை இரண்டு நாட்களுக்குள் வழங்குவதுடன், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
