சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 2026 பிப்., 17ல் துவக்கம்
சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 2026 பிப்., 17ல் துவக்கம்
UPDATED : செப் 25, 2025 09:04 AM
ADDED : செப் 25, 2025 09:05 AM

சென்னை:
'சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கான பொதுத் தேர்வுகள், அடுத்த ஆண்டு பிப்., 17ல் துவங்கும். இந்த ஆண்டு முதல் முறையாக, 10ம் வகுப்புக்கு, இரண்டு முறை தேர்வுகள் நடக்க உள்ளன' என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இந்த கல்வியாண்டின் பொதுத்தேர்வுக்கான உத்தேச பட்டியலை, நேற்று டில்லியில் வெளியிட்டது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை, 45 லட்சம் மாணவ - மாணவியர் எழுத உள்ளனர். இதில், இந்தியா மட்டுமின்றி, 26 வெளிநாடுகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.
தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி, இந்த ஆண்டு முதல், 10ம் வகுப்புக்கு, இரண்டு முறை தேர்வுகள் நடக்க உள்ளன. அதன்படி, முதல் பதிப்பு, பிப்., 17ல் துவங்கி, மார்ச் 6ல் முடிய உள்ளது. இரண்டாம் பதிப்பு தேர்வுகள், மே 15 முதல், ஜூன் 1 வரை நடக்க உள்ளன. பிளஸ் 2 தேர்வுகள், பிப்., 17ல் துவங்கி, ஏப்., 9ம் தேதி வரை நடக்க உள்ளன.
ஒவ்வொரு பாடத்தின் தேர்வு முடிந்த 10 நாட்களில், விடைத்தாள் மதிப்பீட்டு பணியை துவக்கி, அடுத்த 12 நாட்களில் முடித்து, தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என, சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது.