சி.பி.எஸ்.இ., விடைத்தாள் மறுமதிப்பீடு; குளறுபடி நிறுவனத்துக்கு தொடர்ந்து பணி
சி.பி.எஸ்.இ., விடைத்தாள் மறுமதிப்பீடு; குளறுபடி நிறுவனத்துக்கு தொடர்ந்து பணி
UPDATED : ஜூன் 07, 2026 11:49 PM
ADDED : ஜூன் 07, 2026 11:51 PM

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பணியில் குளறுபடி புகாருக்கு ஆளான, 'கோஎம்ப்ட் எஜுடெக்' நிறுவனமே, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணியை மீண்டும் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை, ஓ.எஸ்.எம்., எனப்படும், கணினி திரை வழியில் மதிப்பீடு செய்தது. இதில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் புகார் அளித்தனர். விடைத்தாளின் பக்கங்கள் விடுபட்டிருப்பது, மங்கலான ஸ்கேன் நகல்கள், திருத்தப்படாத பதில்கள் மற்றும் கையெழுத்து மாறுபாடுகள் போன்ற பல புகார்கள் எழுந்தன.
இந்த பணியை செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட, 'கோஎம்ப்ட்' நிறுவனம் தேசிய அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. 'கோஎம்ப்ட்' நிறுவனம் 2019ல், 'குளோபரினா டெக்னாலஜிஸ்' என்ற பெயரில் செயல்பட்ட போது, தெலுங்கானா பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குளறுபடி ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு மதிப்பீட்டில் ஏற்பட்ட குளறுபடிக்கு பின் ஓ.எஸ்.எம்., தளத்தில் விடைத்தாள் கசிவுகள் தடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்களின் தரவுகள் மற்றும் விடைத்தாள் பதிவுகள் அனைத்தும், 'கோஎம்ப்ட்' நிறுவனத்தின் சர்வரில் இருந்து சி.பி.எஸ்.இ., சர்வருக்கு மாற்றப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு பணிகள் கடந்த 2ம் தேதி துவங்கின. மறுமதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பதிவேற்றும் பணியில் சி.பி.எஸ்.இ., தொடர்ந்து, 'கோஎம்ப்ட்' நிறுவனத்தை ஈடுபத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
