அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 80 மணி நேர 'இன்டர்ன்ஷிப்'
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 80 மணி நேர 'இன்டர்ன்ஷிப்'
UPDATED : செப் 25, 2025 08:13 AM
ADDED : செப் 25, 2025 08:16 AM

திருப்பூர்:
தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு வெளியுலக புரிதல், வேலை வாய்ப்பு குறித்த தெளிவை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த, 3 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவ, மாணவியருக்கு 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அவ்வகையில், திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) தங்க மனோகரிதேவி, உதவி தலைமையாசிரியை வசந்தாமணி, தொழில் கல்வி ஆசிரியர் அருள்ராஜ், ஆசிரியை சித்ரா ஆகியோர் தலைமையில், 'கிளரிக்கல்' சார்ந்த தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள், கோவை, திருப்பூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி, பெருமாள் கோவில் அருகேயுள்ள தணிக்கையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
வரும், அக்., 6ல் துவங்கி, 10 நாட்களுக்கு, தினமும், 8 மணி நேரம், என மொத்தம், 80 மணி நேரம், மாணவர்களுக்கு, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. மாணவர்கள், வங்கி நடைமுறை, பண பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை நேரில் பார்த்து அறிந்து கொள்ள உள்ளனர். அதேபோல், ஜெய்வாபாய், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் பயிலும் மாணவியரும் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
மதிப்பு உயரும்! ஆசிரியர்கள் கூறுகையில், 'அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடப்பிரிவு சார்ந்துள்ள வேலை வாய்ப்பு குறி த்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தான், இத்தகைய 'இன்டர்ன்ஷிப்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 3 ஆண்டாக நடைமுறையில் உள்ள இத்திட்டத்தால், தொழில் கல்வி மீதான மதிப்பு உயர்கிறது. தொழில் கல்வி பயில்வோருக்கு, வேலை வாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது,' என்றனர்.