60 பேராசிரியர் இடங்கள் காலி; என்.ஐ.ஆர்.எப்., ரேங்க் சரியும்
60 பேராசிரியர் இடங்கள் காலி; என்.ஐ.ஆர்.எப்., ரேங்க் சரியும்
UPDATED : ஜூன் 03, 2026 08:40 PM
ADDED : ஜூன் 03, 2026 08:42 PM

கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 147 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்கலையில் 40க்கும் மேற்பட்ட துறைகளில் 180க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், 30க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றுகின்றனர். 2,800க்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பாரதியார் பல்கலையின் துணைவேந்தராக இருந்த காளிராஜ் 2022 அக்டோபரில் ஓய்வு பெற்றார். அதன்பிறகு நான்கு ஆண்டுகளாகியும் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. நிரந்தர துணைவேந்தர் இல்லாத நிலை நீடிப்பதால், பல்கலையின் நிர்வாகம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக, பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த் கூறியதாவது:
பல்கலையில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 8 பேராசிரியர்கள் வரை ஓய்வு பெறுகின்றனர். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் தற்போது 60க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பேராசிரியர்களுக்கு சி.ஏ.எஸ்., பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. சில துறைகளில் இரண்டு நிரந்தர பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். பல துறைகளில் கவுரவவிரிவுரையாளர்களை நியமித்தே கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய விதிகளின்படி, பேராசிரியர்கள் 8 பேர், இணைப் பேராசிரியர்கள் 6 பேர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் 4 பேர் வரை பி.எச்.டி., மாணவர்களை வழிநடத்த முடியும். எனவே, நிரந்தர பேராசிரியர்களின் எண்ணிக்கை குறையும் போது, பி.எச்.டி., மாணவர் சேர்க்கையும் குறைகிறது. தற்போது 40 துறைகளில் மொத்தம் 206 பி.எச்.டி., மாணவர்கள் பயின்று வருகின்றனர். பேராசிரியர்கள் பற்றாக்குறையால் பி.எச்.டி., மாணவர் சேர்க்கை குறைவதுடன், ஆய்வுக் கட்டுரைகள், ஆராய்ச்சி மற்றும் நிதியுதவி பெறும் திட்டங்களின் எண்ணிக்கையும் சரிவடைந்து வருகிறது.
பாடத்திட்டங்களை புதுப்பித்தல் மற்றும் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. காப்புரிமைகள் மற்றும் புதுமை சார்ந்த ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்கலையின் என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையும் பாதிக்கப்படும்.
மேலும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர், இயக்குனர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகிக்க அனுபவமிக்க பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பல்கலையின் ஒட்டுமொத்த கல்வித் தரம் மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கல்வி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை திறம்பட முன்னெடுக்க, நிரந்தர துணைவேந்தரை உடனடியாக நியமிப்பது அவசியமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
