போட்டி தேர்வு வினாத்தாள் குறித்து விவாதித்தால் 5 ஆண்டு சிறை; ரூ.10 லட்சம் அபராதம்
போட்டி தேர்வு வினாத்தாள் குறித்து விவாதித்தால் 5 ஆண்டு சிறை; ரூ.10 லட்சம் அபராதம்
UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 09:36 AM

புதுடில்லி:
'போட்டி தேர்வின் வினாத்தாள் விபரங்களை கசியவிட்டாலோ, அது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் செய்தாலோ கடும் தண்டனை, நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசின் எஸ்.எஸ்.சி., எனப்படும் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
எஸ்.எஸ்.சி., எனப்படும் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு, மத்திய அரசின் 'குரூப் - சி' பிரிவிற்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில், நடத்தப்படும் தேர்வுகள் தொடர்பாக, சமூக வலைதளங்களில் விவாதித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
எஸ்.எஸ்.சி.,யால் தேர்வுகள் நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறது. இதற்கு தேர்வர்களின் ஒத்துழைப்பு அவசியம். நடத்தப்படும் தேர்வுகள், நடந்து முடிந்த தேர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் விவாதிப்பது தெரியவந்துள்ளது.
இதனால், தேர்வின் தன்மை பாதிக்கப்படுகிறது. ஆகையால், தேர்வு வினாத்தாள் விபரங்களை கசியவிடுவது, அது தொடர்பாக விவாதங்கள் நடத்துவது போன்ற விஷயங்களை தேர்வர்களோ, தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு விவாதித்தால், பொதுத் தேர்வுகள் நியாயமற்ற முறையில் நடப்பதை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சட்டப்பிரிவின்படி, தனிப்பட்ட குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். விதிமீறும் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும். இந்த சட்டப்பிரிவின்படி கைது செய்யப்ப ட்டால், அவர்களுக்கு ஜாமின் கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.