38 அரசு பள்ளிகளில் 'ரோபோட்டிக்ஸ் லேப்' விரைவில் வருகிறது!
38 அரசு பள்ளிகளில் 'ரோபோட்டிக்ஸ் லேப்' விரைவில் வருகிறது!
UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 08:49 AM

கோவை:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.15.43 கோடியில் 'ரோபோட்டிக்ஸ்' ஆய்வகங்கள் உருவாக்கப்பட உள்ளன.
9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், 'ரோபோட்டிக்ஸ்' சார்ந்த தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், குழுவாக இணைந்து செயல்படும் திறனை கற்றுக்கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும், மாவட்டத்துக்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில், 38 பள்ளிகளில், இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்படுகின்றன.
கோவை கல்வி மாவட்டத்தில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் டி.நல்லிகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தேர்வாகியுள்ளன. இதில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் அமைக்க, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பள்ளியின் ஒரு வகுப்பறையில் ஆய்வகம் அமைக்கப்படும். சுற்றுவட்டாரத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆய்வகத்தை பார்வையிடும் வகையில், தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
கல்வித்துறையினர் கூறுகையில், 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், 'ரோபோட்டிக்ஸ்' கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் கொண்ட ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. அக்., மாதம் பணிகள் துவங்கவுள்ளன' என்றனர்.