2030ல் விடைபெறுகிறது 'ஐ.எஸ்.எஸ்.,' நாசாவின் திட்டம் என்ன?
2030ல் விடைபெறுகிறது 'ஐ.எஸ்.எஸ்.,' நாசாவின் திட்டம் என்ன?
UPDATED : செப் 29, 2025 11:00 AM
ADDED : செப் 29, 2025 11:02 AM

வாஷிங்டன்:
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டு காலம், வரும் 2030ம் ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தது என்ன என்பது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
கடந்த 2000ம் ஆண்டு முதல், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில், ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்படுகிறது. இதை அமெரிக்காவின் நாசா அமைப்பு கட்டமைத்தது.
ஆய்வுப் பணி வரும் 2030ம் ஆண்டுடன் தன் பணியை இது நிறைவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளி வரலாற்றில் மனித குலம் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை மூட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.எஸ்.எஸ்.,சில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் மிக சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்க ள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆராய்ச்சி மையமாக விளங்கும் இந்த விண்வெளி நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து பயணித்து, 4,000க்கும் மேற்பட்ட புரட்சிகரமான ஆராய்ச்சிகளை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு, சுற்றுப்பாதையில் உலகளாவிய ஒத்துழைப்பை எவ்வாறு அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
இந்த ஆய்வுகள் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு வழிவகுத்துள்ளன. அவை எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு உதவும் அதே வேளையில், பூமியில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் முன்னேற்றவும் உதவியுள்ளன.
இந்நிலையில், ஐ.எஸ்.எஸ்.,க்கு மாற்றாக, வணிக விண்வெளி நிலையங்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய மாதிரியின் வாயிலாக விண்வெளியில் மனித இருப்பை தக்க வைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது. தனியார் பங்களிப்பு தன் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து இதற்காக ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.
இதன்படி, இனி ஒரு அரசுக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தை கட்டி இயக்குவதை விட, ஒரு புதிய தலைமுறை விண்வெளி நிலையங்களை உருவாக்கி இயக்குவதற்கு தனியார் நிறுவனங்களுடன் நாசா இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த அணுகுமுறையால் செலவு குறைவதுடன், ஒரு வலுவான விண்வெளி பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்களை செயல்படுத்தவதற்காக, புதிய விண்வெளி நிலையங்களை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க நாசா, 3,520 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
வரும் 2030ல் ஐ.எஸ்.எஸ்., ஆயுட்காலம் முடியும் முன் இந்த புதிய விண்வெளி நிலையத்தை தயார் செய்து இயக்குவதே நாசாவின் நோக்கமாகும்.
அதன்பின், தற்போதுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை, சுற்றுவட்ட பாதையில் இருந்து அகற்றி, பசிபிக் பெருங்கடலின் தொலைதுார பகுதியில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.