போலி ஆவணங்கள் தாக்கல் செய்த 21 மாணவர்கள் சிக்கினர்
போலி ஆவணங்கள் தாக்கல் செய்த 21 மாணவர்கள் சிக்கினர்
UPDATED : செப் 15, 2025 12:00 AM
ADDED : செப் 15, 2025 11:25 AM

பெங்களூரு:
போலியான மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்து, மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர முயன்ற 21 மாணவர்கள் சிக்கினர். இந்த மோசடியை கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. தொடர் பரிசோதனைகளில் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் கிடையாது என்பது அம்பலமானது.
மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பது என்பது, பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது. விடா முயற்சியுடன் பலரும் அந்த படிப்பை எட்டிப்பிடிக்கின்றனர். ஒரு சிலர், குறுக்குவழியை தேர்ந்தெடுத்து ஆபத்தில் சிக்குகின்றனர். அப்படி ஒரு சம்பவம், கர்நாடகாவில் நடந்துள்ளது.
யு.ஜி.சி.இ.டி., மற்றும் நீட் தேர்வுக்கு ஆஜரான மாற்றுத்திறனாளிகள், இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்க்க விண்ணப்பிக்கும்போது, அவர்கள் பல்வேறுகட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதுதொடர்பாக கிடைக்கும் அறிக்கை அடிப்படையில், கே.இ.ஏ., முடிவு செய்யும்.
நடப்பாண்டு யு.ஜி.சி.இ.டி., மற்றும் நீட் தேர்வுக்கு ஆஜரான 21 பேர், தாங்கள் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் என்று கூறி, அதற்குரிய இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்க்கக் கோரி, கே.இ.ஏ.,விடம் விண்ணப்பித்தனர்.
அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக, பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனைக்கு, ஆணையம் அனுப்பியது. இங்கு பல கட்டங்களில், மாணவர்களுக்கு பரிசோதனை நடந்ததில், அவர்கள் மாற்றுத்திறனாளி இல்லை என்பது அம்பலமானது.
இதுதொடர்பாக, செப்டம்பர் 1ம் தேதி, கே.இ.ஏ.,வுக்கு விக்டோரியா மருத்துவமனை இ.என்.டி., பிரிவு தலைவர் ரவிசங்கர் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த மாணவர்கள், நிமான்ஸ் மற்றும் விஜயநகர பொது மருத்துவமனையில், காது கேட்காத மாற்றுத்திறனாளி என, பிரமாண பத்திரம் பெற்றுள்ளனர். இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், மாற்றுத்திறனாளியாக தெரியவில்லை.
எனவே அவர்கள் சமர்ப்பித்த மருத்துவ ஆவணங்களின் தன்மை குறித்து, நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினோம். இதை பற்றி அறிக்கை அளித்த நிமான்ஸ் மருத்துவமனை, 21 பேரில் ஒருவர் கூட, அங்கு பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதும் அவர்கள் வைத்துள்ள ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளது. எனவே போலியான ஆவணங்களை பயன்படுத்தி, மருத்துவக் கல்லுாரிகளில் சேர முயற்சித்தவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதன்படி 21 மாணவர்களுக்கும், கே.இ.ஏ., விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பியது. இதில் இரண்டு பேரின் பெற்றோர், எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். இவர்களுக்கு பரமப்பா, ராஜண்ணா, சந்திரசேகர், சேன்னகேசவா ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது.
ஒரு மாணவரின் தந்தை, கே.இ.ஏ.,வுக்கு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவ சீட் கோரி, என் மகன் விண்ணப்பம் தாக்கல் செய்தபோது, மாற்றுத்திறனாளி கோட்டா என்று குறிப்பிடவில்லை. என் மகனுக்கு, நிர்வாக இடஒதுக்கீட்டில் மருத்துவ சீட் பெற முயற்சித்தேன். அப்போது எனக்கு அறிமுகமான நெலமங்களாவின் உடற்பயிற்சி ஆசிரியர் தேவராஜ், தன் உறவினரான சந்திரசேகர் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரிடம் பேசியபோது, பரமப்பா என்பவரின் மொபைல் போன் எண்ணை கொடுத்து, அவரை தொடர்பு கொள்ளும்படி கூறினார். அவரிடம் பேசினோம். சந்திரசேகரும், பரமப்பாவும் சேர்ந்து, என் மகனுக்கு மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டில் மருத்துவ சீட் பெற்றுத்தருவதாக கூறினர்.
அவர்கள் தான், என் மகன் பெயரில், விக்டோரியா மற்றும் நிமான்ஸ் மருத்துவமனைகளில் போலியான மருத்துவ ஆவணங்களை உருவாக்கினர். மருத்துவ சீட்டுக்காக 38 லட்சம் ரூபாய் கேட்டனர். முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறு அவர் விவரித்திருந்தார்.
தர்ஷன் பீமராயா அளித்த விளக்கத்தில், 'எனக்கு நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் கிடைக்கவில்லை. நான் மருத்துவ சீட்டுக்காக பரமப்பாவை தொடர்பு கொண்ட போது, மாற்றுத்திறனாளி கோட்டாவில், மருத்துவ சீட் பெற்றுத்தருவதாக கூறினார். 35 லட்சம் ரூபாயாகும். முன் பணமாக 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என, பணம் பெற்றார்.
அதன்பின் என் மொபைல் எண், இ - மெயில் ஐடி, சி.இ.டி., மற்றும் நீட் தேர்வு மதிப்பெண் விபரங்களை பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளி என்ற பிரமாண பத்திரத்தை எனக்கு தபாலில் அனுப்பினார். பரமப்பாவே விக்டோரியா மருத்துவமனையில் காட்டும்படி கூறி, என்னிடம் சில ஆவணங்களை கொடுத்தார்' என விவரித்திருந்தார்.
இதையடுத்து, போலியான ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஏஜென்டுகள் பரமப்பா, ராஜண்ணா, சந்திரசேகர், சென்னகேசவா ஆகியோர் மீதும், குறுக்குவழியில் மருத்துவ சீட் பெற முயற்சித்த 21 மாணவர்கள் மீதும், புகார் அளிக்க கே.இ.ஏ., நிர்வாக இயக்குநர் பிரசன்னா உத்தரவிட்டார்.
அதன்படி, பெங்களூரின் மல்லேஸ்வரம் போலீஸ் நிலையத்தில், கே.இ.ஏ., தலைமை நிர்வாக அதிகாரி இஸ்லாவுதீன் கத்தால் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார், நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.