இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இன்று மீண்டும் துவங்குது பேச்சுவார்த்தை
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இன்று மீண்டும் துவங்குது பேச்சுவார்த்தை
UPDATED : செப் 16, 2025 06:12 AM
ADDED : செப் 15, 2025 04:44 PM

புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை இன்று ( செப்.,16) நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் இன்று இரவு டில்லி வர உள்ளனர்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஐந்து சுற்றுக்கள் இந்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், விவசாயம் மற்றும் பால்பண்ணைத் துறையில் இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தடைபட்டது. அமெரிக்க பிரதிநிதிகளும் இந்தியா வரவில்லை.
இதனிடையே, சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடியும், இந்த பேச்சுக்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டு இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதாக வர்த்தகத்துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையில், தூதரகம், வர்த்தக சிறப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மட்டத்தில் என பல வகைகளில் நடைபெற்று வருவதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய சார்பில், வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் பங்கேற்க உள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அரசு சார்பில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினர் டில்லி வந்தனர்.