இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே
ADDED : செப் 13, 2025 04:14 PM

மும்பை: இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக உத்தவ் தாக்கரே போராட்டத்தை அறிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி, செப்..14ம் தேதி நடக்கிறது.
ஆனால் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம், இந்திய எல்லையில் பாக். ஆதரவு பயங்கரவாத இயக்கங்களின் அத்துமீறல் ஆகியவற்றை முன்வைத்து பாகிஸ்தானுடன் ஏன் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று கேள்விகளும், கொதிப்பும் எழுந்து வருகிறது.
பாகிஸ்தானுடன் இந்தியா மோதக்கூடாது என்று குரல்கள் எழுந்து வரும் சூழலில், போட்டியை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:
ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் இப்போது எப்படி இவை இரண்டும் ஒன்றாக பாயும்? போரும், கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?
அவர்கள் தேசப்பற்று என்று கூறி வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் நாளைய போட்டியில் விளையாட இருக்கின்றனர். இந்த ஆட்டத்தின் மூலம் பணத்தை சம்பாதிக்க உள்ளனர்.
நாளை(செப்.14) சிவசேனா மகளிர் அணியினர் மஹாராஷ்டிரா தெருக்களில் இறங்கி போராடுவர்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.