நமக்கு கிடைக்கும் நன்மைகள் மகத்தானதாக இருக்கும்; நிதின் கட்கரி
நமக்கு கிடைக்கும் நன்மைகள் மகத்தானதாக இருக்கும்; நிதின் கட்கரி
ADDED : செப் 11, 2025 01:41 PM

புதுடில்லி: ''நாம் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடும் 22 லட்சம் கோடி ரூபாயை, எத்தனால் உற்பத்தி போன்ற உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக உள்நாட்டு பொருளாதாரத்தில் செலவிட்டால், நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மகத்தானதாக இருக்கும்,'' என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
டில்லியில் எஸ்ஐஏஎம் எனப்படும் ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பின் 65 வது சர்வதேச மாநாடு நடைபெற்றது.இந்த சர்வதேச மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டாா். இம்மாநாட்டில் நிதின் கட்கரி பேசியதாவது:
பிரதமரின் தொலைநோக்குப் பார்வை ஒரு சுயசார்பு இந்தியா. நமக்கு பெட்ரோலியம் இறக்குமதிக்காக 22 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இந்தியப் பொருளாதாரத்தில் இந்த 22 லட்சம் கோடி செலுத்தப்பட்டால், நன்மைகள் மகத்தானதாக இருக்கும்.
எனவே நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது என்ற கேள்வியால் தான் சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்க முடிவு செய்தோம். இதன் விளைவாக, உத்தரப் பிரதேசம், பீஹார் மற்றும் நாடு முழுவதும் மக்காச்சோள சாகுபடி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
விவசாயத்தை எரிசக்தி மற்றும் மின்சாரத் துறையில் பன்முகப்படுத்துவது விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கிறது. பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது, அதில் எந்தத் தவறும் இல்லை.
இந்தியாவின் வாகன ஸ்கிராப்பேஜ் (மறுசுழற்சி) கொள்கையில் தொலைநோக்கு நன்மைகள் உள்ளது. ஆகஸ்ட் 2025 இல் 3 லட்சம் வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட்டது. இதில் மாதத்திற்கு சராசரியாக 16,830 வாகனங்கள் கொண்ட 1 லட்சம் அரசு வாகனங்கள் அடங்கும். வாகனங்களை ஸ்கிராப் செய்வது தனியார் துறைக்கு ரூ.2700 கோடி லாபத்தை ஈட்ட உதவும்.
இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் சுமார் ரூ.40,000 கோடி வருவாயை ஈட்ட முடியும், வாகன உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி செலவுகளை கணிசமாகக் குறைக்கும்.
கூடுதலாக, பழைய வாகனங்களை கைவிடும் நுகர்வோரை ஊக்குவிக்க, ஸ்கிராப் யார்டுகளை விரிவுபடுத்தவும், ஸ்கிராப்பிங் சான்றிதழ்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும்.
இந்தக் கொள்கை கிட்டத்தட்ட 70 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கும். இது பொருளாதாரம், தொழில் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஒரு வெற்றியாக அமைகிறது.
இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.