'ஐ லவ் முகமது' போஸ்டரால் உத்தர பிரதேசத்தில் பதற்றம்
'ஐ லவ் முகமது' போஸ்டரால் உத்தர பிரதேசத்தில் பதற்றம்
ADDED : செப் 27, 2025 08:13 AM

கான்பூர் : உத்தர பிரதேசத்தில், 'ஐ லவ் முகமது' என்ற போஸ்டர்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு சம்பவம் அரங்கேறியதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சுவர்களில், 'ஐ லவ் முகமது' என்ற போஸ்டர், கடந்த 4ம் தேதி ஒட்டப்பட்டது. இது, பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், ஹிந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டியதாக கான்பூரைச் சேர்ந்த ஒன்பது பேர் மற்றும் அடையாளம் தெரியாத 15 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேசத்தின் பரேலியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்குபின் முஸ்லிம் கள் ஒன்றுக்கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களில் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பரேலியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.