UPDATED : மே 12, 2026 10:30 PM
ADDED : மே 12, 2026 10:13 PM

புதுடில்லி:பல்வேறு மாநிலங்களில் கோவில்களில் இருந்த வெள்ளி சிலைகளை குறிவைத்து திருடி வந்த கொள்ளையன், அடிக்கடி பதுங்குமிடங்களையும் மாற்றி வந்த நிலையில் போலீசார் டில்லியில் (மே 12) அவனை கைது செய்தனர்.
கோவில்களை குறிவைத்து அங்குள்ள வெள்ளி சிலைகளை திருடுவதில் நிபுணத்துவம் பெற்றவர் மோஹித் சர்மா, 44. இவரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது:
பஞ்சாப், கேரளா, கர்நாடகா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கோவில்களை குறிவைத்து சர்மா கொள்ளையடித்து வந்துள்ளார். குறிப்பாக காவலாளிகள் இல்லாத கோவில்கள் அல்லது ஊருக்கு வெளியே அமைந்துள்ள கோவில்களை குறிவைத்து நள்ளிரவு அல்லது அதிகாலையில் கொள்ளையை அரங்கேற்றுவார்.
கொள்ளையடித்ததும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று பதுங்குவதால் அவரைப் பிடிப்பது போலீசுக்கு சவாலாக இருந்தது. டில்லியில் நடமாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் சர்மாவை பொறி வைத்து பிடித்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
