வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : செப் 15, 2025 11:33 AM

புதுடில்லி: வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரமில்லை. சில பிரிவுகளுக்கு மட்டும் தற்காலிக தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வக்ப் சட்ட திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருந்தது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த வக்பு திருத்தச் சட்டத்தை சிலர் எதிர்த்தனர். இது தொடர்பாக சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சிங்வி என பல்வேறு தரப்பினரும் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம்கோர்ட், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் இன்று (செப் 15) சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* வக்பு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
* ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதை முடிவு செய்யும் விதிகளை மாநில அரசு வகுக்கும் வரை தடை தொடரும்.
* வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாது உறுப்பினர் எண்ணிக்கை 3க்கு மேல் இருக்கக்கூடாது.
* முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரமில்லை. சில பிரிவுகளுக்கு மட்டும் தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.
* தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை முடிவு செய்ய கலெக்டர் அனுமதிக்கப்பட முடியாது, இது அதிகாரப் பிரிவினையை மீறும் செயலாகும். தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை, எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.