ஆபாச படங்களுக்கு தடை விதித்தால் கொந்தளிப்பு ஏற்படும்; நேபாள வன்முறையை சுட்டிக்காட்டியது சுப்ரீம் கோர்ட்
ஆபாச படங்களுக்கு தடை விதித்தால் கொந்தளிப்பு ஏற்படும்; நேபாள வன்முறையை சுட்டிக்காட்டியது சுப்ரீம் கோர்ட்
ADDED : நவ 04, 2025 04:59 AM

ஆபாச படங்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 'ஒரு தடையால் நேபாளத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியும் அல்லவா' என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனினும், நான்கு வாரங்களுக்குப் பின் மனு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன், ஆபாச படங்களுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:
ஆபாச படங்களை வயது வந்தோர் மட்டும் காணும் வகையில் மத்திய அரசு ஒரு கொள்கையை வகுக்க வேண்டும்.
கட்டுப்பாடு வயது வித்தியாசம் இல்லாமல் இணையதளங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஆபாச படங்கள் எளிதாக கிடைக்கின்றன.
தவிர, 13 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினர் மனதில் ஆபாச படங்கள் தீமையான எண்ணங்களை விதைக்கின்றன.
இதனால், தனிநபரும், சமூகமும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, வயது குறைந்தவர்கள் ஆபாச படங்களை காண தடை விதிக்க வேண்டும்; அதற்கான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேசிய அளவில் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
இவ்வாறு வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ''ஒரு தடையால் நேபாளத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை இந்த உலகமே பார்த்தது. எனினும், இந்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது,'' என கூறினார்.
போராட்டம் வரும் 23ம் தேதியுடன் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு பெறவுள்ளதால், இம்மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
நம் அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், தலைநகர் காத்மாண்டுவில் கடந்த செப்., 8 மற்றும் 9ம் தேதிகளில், அரசுக்கு எதிராக இளைஞர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
இதனால், நேபாளத்தில் ஆட்சியே ஆட்டம் கண்டது. பிரதமர், அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி பதவி விலக நேர்ந்தது.
வன்முறை சம்பவங்களில், 76 பேர் கொல்லப்பட்டனர். அதே சமயம், இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
--- டில்லி சிறப்பு நிருபர் -:

