சுதேசி 4ஜி சேவை: பிஎஸ்என்எல் சார்பில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
சுதேசி 4ஜி சேவை: பிஎஸ்என்எல் சார்பில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ADDED : செப் 27, 2025 04:04 PM

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட 4ஜி பிஎஸ்என்எல் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிறுவனத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 97,500 மொபைல் 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மொத்தம் 37 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொலைத் தொடர்புக்கு தேவையான கருவிகளை உள்நாட்டிலேயே உருவாக்கும் டென்மார்க், ஸ்வீடன் தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்த தொலைத் தொடர்பு நெட்வொர்க் ஆனது, 5ஜி மேம்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையை உருவாக்க வேண்டும், டிஜிட்டல் இந்தியாவில் தொலைதூர கிராமங்களையும் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், தொலைத்தொடர்பு வசதி இல்லாத 26 ஆயிரத்து 700 கிராமங்களுக்கு புதிதாக தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும். 20 லட்சம் புதிய சந்தாதாரர்களுக்கு சேவை அளிக்க முடியும். புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள், சோலார் தொழில்நுட்ப மூலம் மின்சக்தி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.