உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டு பதாகைகளில் ஐயப்பன் படம் எங்கே; எதிர்க்கட்சிகள் கேள்வி
உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டு பதாகைகளில் ஐயப்பன் படம் எங்கே; எதிர்க்கட்சிகள் கேள்வி
ADDED : செப் 19, 2025 08:35 PM

திருவனந்தபுரம்: கேரளாவில், உலக ஐயப்ப பக்தர்கள் மாநாடு பிரம்மாண்ட பதாகைகளில் ஐயப்பன் படம் இல்லாததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பம்பை நதிக்கரையில் உலக ஐயப்ப பக்தர்கள் மாநாடு செப்.20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தடை கோரிய வழக்கை சுப்ரீம்கோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது.
மாநாடு ஏற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அது தொடர்பான ஒட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான விளம்பர பதாகைகளில் ஐயப்பன் படம் இல்லாதது கேரள எதிர்க்கட்சிக-ள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐயப்ப மாநாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் முதல்வர் போட்டோ மற்றும் கல்வி அமைச்சர் மட்டுமே உள்ளதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து கேரள மாநில பாஜ தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறி உள்ளதாவது;
தேர்தலுக்கு நான்கு மாதங்கள் முன்பு ஐயப்பன் விவகாரத்தை முன் வைக்கிறார். இது ஒரு கண்துடைப்பு. எனக்கும் அவருக்கும் (முதல்வர் பினராயி விஜயன்) என்று எந்த பிரச்னையும் இல்லை. அவர் பக்தராக மாற விரும்புகிறார். அது அவருக்கு நல்லதுதான்.
நான் அதை வரவேற்கிறேன். ஆனால் அந்த பக்தி இதயத்தில் இருந்து வரும் உண்மையானதாக இருக்க வேண்டும். பிரம்மாண்ட பதாகைகளில் ஐயப்பன் மற்றும் சபரிமலை படம் கட்டாயம் இடம்பெற்று இருக்க வேண்டும். ஆனால், ஐயப்பன் போட்டோ அதில் இல்லை.
அந்த பதாகையில் முதல்வர் படமும், அமைச்சர் சிவன்குட்டி படமும் தான் உள்ளது. இது ஒரு நகைச்சுவை, அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்.
இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறி இருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் கூறுகையில், திருவனந்தபுரத்தில் உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டின் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் முதல்வர் பினராயி விஜயன், தேவசம் அமைச்சர் வாசவன் படம் மட்டுமே இருக்கிறது. தேவசம் போர்டு தலைவர், ஐயப்பன் படம் இல்லை என்றார்.