யுபிஐ மூலம் ரூ.1 கோடி லஞ்சம்; வசமாக சிக்கிய கேரள வனத்துறை அதிகாரிகள்
யுபிஐ மூலம் ரூ.1 கோடி லஞ்சம்; வசமாக சிக்கிய கேரள வனத்துறை அதிகாரிகள்
ADDED : அக் 01, 2025 06:06 PM

திருவனந்தபுரம்: வனவிலங்குக தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு உள்பட பல்வேறு விவகாரங்களில் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமாக கேரள வனத்துறையினர் யுபிஐ மூலம் லஞ்சம் வாங்கியது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் அம்பலமானது.
அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியது மற்றும் வனத்துறையினர் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, 'ஆபரேஷன் வனரக்ஷா' என்ற பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் பல்வேறு அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கம் பரிவர்த்தனை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முடிக்கப்பட்ட கட்டடங்களின் பதிவு செய்யப்பட்ட மற்றும் உண்மையான அளவீடுகளுக்கு இடையே மாறுபாடுகள் இருந்தன. 2025ல் திறந்து வைக்கப்பட்ட பல சோலார் வேலி திட்டங்கள் செயல்படாத நிலையில் இருந்தன. மரங்கள் சரியான ஏல முறைகளைப் பின்பற்றாமல் விற்கப்பட்டன. பில்கள், நிதி பயன்பாடு பதிவேடுகள், ரசீதுகள் உட்பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் காணப்படவில்லை. சட்டபூர்வமான மருத்துவ ஆவணங்கள் இல்லா நிலையில், பல முறை இழப்பீடு வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, வனவிலங்கு தாக்குதல் இல்லாத போதும், மதுபோதையில் பைக் விபத்தில் ஏற்பட்ட காயம் என மருத்துவர் சான்றழித்ததற்கும், வனத்துறையின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது லஞ்ச ஒழப்புத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, கட்டடப் பணிகள், வனவிலங்குகளுக்கான குளங்கள் கட்டுதல், சாலை தார் பூசுதல், சோலார் வேலி, எல்லை குறியீடு, உட்பட பல துறைகளில் ஊழல் பரவலாக இருந்தது. பெரும்பாலும் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளின் பினாமிகளாக செயல்பட்டு, ஆன்லைன் பரிவர்த்தனைகள், யுபிஐ பரிமாற்றங்கள் மூலம் லஞ்சம் மற்றும் கமிஷன் பெற்றுள்ளனர்.
அண்மையில், வல்லக்கடவு வனச்சரக அலுவலகத்தில், ஒரு ஒப்பந்ததாரரிடம் இருந்து கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை ரூ.72.8 லட்சம் பெற்றதாக வனத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். தேக்கடி வனச்சரக அலுவலகத்தில், அதே ஒப்பந்ததாரர் வன அதிகாரிக்கு தொடர்புடைய பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.31.08 லட்சம் டெபாசிட் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மேலும் பல வனத்துறை அதிகாரிகளும் யுபிஐ மூலம் லஞ்சம் பெற்றது லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் தெரிய வந்தது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மனோஜ் ஆபிரஹாம் கூறியதாவது; லஞ்சம் பெறும் அல்லது ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து குற்றங்களைச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாட்களில் தொடர் சோதனைகள் நடத்தப்படும். கடந்த ஐந்து ஆண்டுகால திட்டக் கோப்புகள் விரிவான மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும். அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களின் வங்கிக் கணக்கு அறிக்கைகளின் பரிசோதனையும் விசாரணையில் சேர்க்கப்படும், எனக் கூறினார்.