பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றியில் சந்தேகமில்லை: பிரதமர் மோடி உறுதி
பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றியில் சந்தேகமில்லை: பிரதமர் மோடி உறுதி
ADDED : நவ 04, 2025 06:42 PM

புதுடில்லி: '' பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் முடிவடைய உள்ள நிலையில், பாஜ பெண் தொண்டர்களுடன் நமோ செயலி வழியாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது பிரதமர் கூறியதாவது:முதற்கட்ட தேர்தலுக்கு முன்பு, உங்களின் கடின உழைப்பு மற்றும் அனுபவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களிடம் பேச விரும்பினேன். இந்தத் தேர்தலை நான் கண்காணித்து வருகிறேன். தேஜ கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். தேஜ வெற்றியில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இந்த முறையும் தேஜ கூட்டணியை வெற்றி பெற செய்வதுடன், 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்குவது என பீஹார் வாக்காளர்கள் முடிவு செய்துவிட்டனர். காட்டாட்சி நடத்திய மக்கள் படுதோல்வியை சந்திப்பார்கள். இதனை பெண் வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும். தேஜ ஆட்சியில் தான் பீஹார் வளர்ச்சி பெறும்.
பேரணிகளுக்கு ஏராளமான பெண் தொண்டர்கள் வருகின்றனர், பாஜவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புகின்றனர். இந்தத் தேர்தலில் 225 தொகுதிகள் என்ற பெண் தொண்டர்களின் கோஷம் பாராட்டுக்குரியது. பெண்களின் ஓட்டு தேஜ கூட்டணிக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தவும் தேஜ கூட்டணி உறுதிபூண்டுள்ளது.
பீஹாரில் இரண்டு இளவரசர்கள் உலா வருகின்றனர். அதில் டில்லியில் இருந்து வந்த ஒருவர், சாத் பண்டிகையை அவமானப்படுத்தினார். மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியவர்களுக்கு வாக்காளர்கள் பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

