மோகன்லாலுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது; நடிகர்கள் ஷாருக், பாஸ்கருக்கு தேசிய விருதுவழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
மோகன்லாலுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது; நடிகர்கள் ஷாருக், பாஸ்கருக்கு தேசிய விருதுவழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
UPDATED : செப் 24, 2025 11:51 AM
ADDED : செப் 24, 2025 07:20 AM

புதுடில்லி: டில்லியில் நேற்று நடந்த, 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவின் உயரிய விருதான, 'தாதா சாகேப் பால்கே' வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார். நடிகர்கள் ஷாருக் கான், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
கடந்த 1954 முதல், சிறந்த திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஆண்டு தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2023க்கான தேசிய திரைப்பட விருதுகள், ஆக., 1ல் அறிவிக்கப்பட்டன. 2023க்கான, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
சிறந்த நடிகருக்கான விருது, டுவெல்த் பெயில் படத்திற்காக விக்ராந்த் மாஸ்ஸே மற்றும் ஜவான் படத்திற்காக பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது. 33 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடிக்கும் ஷாருக் கான், சிறந்த நடிகருக்கான தேசிய விருது வெல்வது இதுவே முதன்முறை.
திருமதி சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. வாத்தி படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெற்றார். இது அவருக்கு இரண்டாவது தேசிய விருது. இதற்கு முன் சூரரைப்போற்று படத்திற்காக விருது பெற்றார்.
தமிழில் சிறந்த படம் மற்றும் திரைக்கதைக்கான விருதுகளை, பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் பெற்றனர். மேலும், அந்த படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார்.
உள்ளொழுக்கு என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை ஊர்வசிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது, தி கேரளா ஸ்டோரி படத்திற்காக பிரசந்தனு மொஹபத்ராவுக்கு வழங்கப்பட்டது.