மோடி தான் மீண்டும் பிரதமர் வேட்பாளர்: அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
மோடி தான் மீண்டும் பிரதமர் வேட்பாளர்: அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
ADDED : செப் 23, 2025 10:09 AM

புதுடில்லி: வரும் 2047ம் ஆண்டு வரை பாஜ பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; பாஜவின் தவிர்க்க முடியாத தலைவர் பிரதமர் மோடிதான். வரவிருக்கும் தேர்தலில் அவர் தான் எங்களின் பிரதமர் வேட்பாளராக இருப்பார்.
2029, 2034, 2039 மட்டுமல்ல, 2044ம் ஆண்டு தேர்தல்களிலும் அவர் தான் எங்களின் பிரதமர் வேட்பாளராக இருப்பார். 2047ம் ஆண்டு நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவுக்கு பின்னர் தான் அவர் ஓய்வு பெறுவார். 2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரதம் என்ற இலக்கை அடைந்த பின்னரே அவர் ஓய்வு பெறுவார்.
1980ம் ஆண்டு முதல் மோடியுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களின் சிக்கலான பிரச்னைகளை எளிதில் தீர்ப்பவர், கடினமான காலங்களில் அவர் சரியான முடிவை எடுப்பவர்.
உலகளாவிய பிரச்னைகளில் கூட மற்ற நாடுகளின் தலைவர்கள் அவரிடம் (பிரதமர் மோடி) ஆலோசனைகளை பெறுகின்றனர். இத்தனை உலக தலைவர்களிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்ற ஒரு தலைவரை, பிரதமரை நான் பார்த்தது இல்லை.
பஹல்காம் தாக்குதலில் அரசின் எதிர்வினை என்பது அவரின் செயலுக்கு ஒரு சான்றாகும். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தருவதற்கு முன்பாக, முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.