முடிவுக்கு வந்தது மராத்தா போராட்டம்; உண்ணாவிரதத்தை முடித்தார் ஜராங்கே
முடிவுக்கு வந்தது மராத்தா போராட்டம்; உண்ணாவிரதத்தை முடித்தார் ஜராங்கே
ADDED : செப் 03, 2025 06:44 AM

மும்பை; மஹாராஷ்டிராவில் நடந்து வந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதியளித்ததால், ஐந்து நாளாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே முடித்துக் கொண்டார்.
போக்குவரத்து நெரிசல் மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மராத்தா சமூகத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே, கடந்த மாதம் 29ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.
தகுதி வாய்ந்த மராத்தாக்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்கி அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தினார்.
ஜராங்கேவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆசாத் மைதானம் மட்டுமின்றி மும்பை நகரின் முக்கிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். இதனால், தெற்கு மும்பையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இந்த விவகாரம், மும்பை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், போராட்டம் நடக்கும் ஆசாத் மைதானத்தை தவிர, ஆக்கிரமிக்கப்பட்ட மற்ற இடங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த காலக்கெடு நேற்று நண்பகலுடன் முடிவுக்கு வந்தது.
இடஒதுக்கீடு இந்நிலையில், போராட்ட பந்தலில் இருந்த ஜராங்கேவை பா.ஜ., மூத்த அமைச்சர் ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல் தலைமையிலான மஹாராஷ்டிரா அரசின் கேபினட் துணைக்குழு சந்தித்து பேச்சு நடத்தியது. அப்போது, மராத்தா இடஒதுக்கீடு தொடர் பான அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இடஒதுக்கீடு கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக தீர்மானமு ம் நிறைவேற்றியது.
இதையடுத்து, அமைச்சர் ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல் கொடுத்த பழரசத்தை அருந்தி, மனோஜ் ஜராங்கே தன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன் மூலம் ஐந்து நாட்களாக தெற்கு மும்பையில் நடந்து வந்த மராத்தாக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், மேள, தாளம் முழுங்கி, போராட்டக்காரர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர்.