மழை எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் தூங்கிய மம்தா பானர்ஜி: பாஜ கண்டனம்
மழை எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் தூங்கிய மம்தா பானர்ஜி: பாஜ கண்டனம்
ADDED : செப் 24, 2025 08:49 AM

கொல்கட்டா: கொல்கட்டா வெள்ளத்தில் மிதக்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அலட்சிய போக்கே காரணம் என்று பாஜ குற்றம்சாட்டி உள்ளது.
மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத அளவு இடைவிடாத பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொல்கட்டா மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜை கொண்டாட்டங்கள் களை இழந்துள்ள சூழலில், மழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கட்டா மற்றும் புறநகர் பகுதிகிளில் 1978ம் ஆண்டு பிறகு செப்டம்பரில் மூன்றாவது அதிக மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 251.4 மிமீ மழை பெய்துள்ளது. மழை உயிரிழப்புகளுடன், பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்திய சூழலில், இது போன்ற ஒரு பிரச்னையை பாஜ அரசியலாக்குவதை கண்டிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார்.
இந் நிலையில் அவரின் கூற்றை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது. மாநில அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என்றும் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், பாஜ பிரமுகருமான சுவேந்து அதிகாரி கூறி உள்ளதாவது;
மீண்டும் ஒருமுறை மம்தா பானர்ஜியின் பொறுப்பற்ற நிர்வாகத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழையை திடீர் மழை என்று அவர் (மம்தா பானர்ஜி) கூறி உள்ளார். ஆனால், மழை பெய்வதற்கு முன்பே ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் வெளியிட்டு இருக்கிறது.
மம்தா பானர்ஜியும், அவரது அமைச்சர்களும் தூங்கிக் கொண்டு இருந்ததால் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி, மின்சாரம் தாக்கி பலியாகினர். எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக வீண் பழி சுமத்துகிறார்.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை ஏன் புறக்கணிக்கப்பட்டது? பேரிடர் மீட்பு படையினர் ஏன் தயார் நிலையில் இல்லை?
இவ்வாறு சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார்.