மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் தொடரும் வன்முறை; சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது
மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் தொடரும் வன்முறை; சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது
ADDED : செப் 26, 2025 04:59 PM

லடாக்: மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கல்வியாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
லடாக் தற்போது யூனியன் பிரதேசமாக உள்ளது. ஆனால், அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வேண்டும், மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் என்பவர் 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
அங்கு மக்கள் சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பிலும் இறங்கினர். போராட்டத்தை தொடர்ந்து, வன்முறையும், கலவரமும் வெடிக்க இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போராட்டம் மற்றும் அதன் நீட்சியாக ஏற்பட்ட கலவரத்துக்கு சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டி, வெளிநாட்டு நிதி பெறும் பதிவை ரத்து செய்தது. ஆனால் வன்முறைக்கு தாம் பலியாக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். எப்போது தாம் கைது செய்யப்பட்டாலும் மகிழ்ச்சியே என்றும் கூறி இருந்தார்.
இந் நிலையில் சோனம் வாங்சுக்கை இன்று (செப்.26) போலீசார் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்களை இன்று மதியம் 2.30 மணியளிவில் சந்திக்க உள்ளதாக அவர் அறிவித்து இருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, டில்லி சலோ என்ற போராட்டத்தின் போது 2024ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அப்போது அவருடன் போராட்டத்தில் இறங்கிய 120 பேரும் கைது செய்யப்பட்டனர்.