கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
UPDATED : அக் 13, 2025 06:43 PM
ADDED : அக் 13, 2025 10:46 AM

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது.
இதற்கிடையே, வழக்கு தொடர்பான கரூர் போலீசாரின் விசாரணைக்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
விசாரணை
அஸ்ரா கர்க்கும் கரூருக்குச் சென்று, உயிர் பலிக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்காத த.வெ.க., தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 'சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது தவறு; நடந்த சம்பவத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும்' என்று முறையிட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 'இந்த விஷயத்தில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவும் முரண்பட்டு இருக்கின்றன.
'இதில் நீதிமன்ற நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை' என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
அதிரடி உத்தரவு
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (அக் 13) வெளியானது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
* இந்த குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது.
* இது எப்படி கிரிமினல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் உண்மையில் அவர்களால் தாக்கல் செய்யவில்லை என்று வக்கீல்கள் முறையிட்டனர். அதற்கு நீதிபதி மகேஸ்வரி, அது உண்மை எனில் நாங்கள் அதை கவனத்தில் கொள்வோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்பாடுகள் பற்றி தீவிரமாக கவனித்தோம்.
கரூர் மாவட்டம் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எப்படி அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்டார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் முடிவை நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.
இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்க கோரிய மனு, எவ்வாறு கிரிமினல் வழக்கின் வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்க வேண்டும். இதனால் தான், நாங்கள் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்!
சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் குழுவிற்கு உச்சநீதிமன்றத்தின்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்வருமாறு:
* சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை கண்காணிக்க வேண்டும்.
* சிபிஐ அதிகாரிகள் விசாரணையின் போது சேகரித்த ஆதாரங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
* விசாரணை முடிவுகளை மேற்பார்வையிட குழுவுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
* கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணமான எந்தவொரு விஷயத்திலும், நியாயமான, வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும்.
* முன்னாள் நீதிபதியின் வழிகாட்டுதல்களின்படி, குழுவினர் செயல்பட வேண்டும். சம்பவம் தொடர்பான எந்த இடங்களிலும் விசாரணை நடத்தலாம்.