இஸ்ரேல் உடனான இந்தியா உறவு வலுவானது; ஜெய்சங்கர் பேச்சு
இஸ்ரேல் உடனான இந்தியா உறவு வலுவானது; ஜெய்சங்கர் பேச்சு
ADDED : நவ 04, 2025 03:36 PM

புதுடில்லி: இஸ்ரேல் உடனான இந்திய உறவு வலுவானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சர் இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். டில்லியில் அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜெய்சங்கர் பேசியதாவது: இஸ்ரேல் உடனான இந்திய உறவு வலுவானது.
இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டுள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அன்பான வரவேற்புகள். நாங்கள் முன்பு தொலைபேசியில் பேசி இருக்கிறோம். ஆனால் இன்று எங்கள் நேரடி விவாதத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் பயங்கரவாத சவால்களைச் சந்தித்து வருகின்றன. பயங்கரவாதம், அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதற்கு நாம் இணைந்து செயல்படுவது அவசியம்.
சமீப காலங்களில், இந்தியா பல புதிய திறன்களை உருவாக்கி உள்ளது. குறிப்பாக ரயில், சாலை மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில். இஸ்ரேலில் உள்ள வாய்ப்புகளை ஆராய எங்கள் குழுவினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதற்கு நாங்கள் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். இவ்வாறு ஜெயசங்கர் பேசினார்.

