நேபாளத்தில் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் உறுதி
நேபாளத்தில் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் உறுதி
ADDED : செப் 18, 2025 03:20 PM

புதுடில்லி: '' நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த அந்நாட்டின் பிரதமர் சுசீலா கார்கியின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டம் காரணமாக அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி, மாணவர்கள் ஆதரவுடன் இடைக்கால பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அடுத்த மார்ச் மாதத்துக்குள் பார்லிமென்ட் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சுசீலா கார்கியுடன் நமது பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதன் பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: நேபாளத்தின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி உடன் ஆலோசனை நடத்தினேன். சமீபத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தும் அவரின் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை உறுதி செய்தேன். நாளை( செப்.,19) நேபாளத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு அவருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.