ஆப்கனுக்கு கை கொடுத்த இந்தியா: 21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ஆப்கனுக்கு கை கொடுத்த இந்தியா: 21 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ADDED : செப் 03, 2025 07:31 AM

புதுடில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருட்களை அந்நாட்டுக்கு இந்தியா அனுப்பி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கின்றனர். ஏராளமானோரை காணவில்லை. 5000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி இருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு உதவுவதாக இந்தியா அறிவித்தது. அதன்படி அந்நாட்டுக்கு 21 டன் எடையில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது;
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. காபூலுக்கு வான் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. மருந்து பொருட்கள், போர்வைகள், சக்கர நாற்காலிகள் என விமானம் மூலம் 21 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
அங்குள்ள நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் நிவாரண பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.