எச்1பி விசா கட்டண உயர்வால் இந்தியாவுக்கே லாபம்: நிபுணர்கள் சொல்வது என்ன?
எச்1பி விசா கட்டண உயர்வால் இந்தியாவுக்கே லாபம்: நிபுணர்கள் சொல்வது என்ன?
ADDED : செப் 21, 2025 05:01 PM

புதுடில்லி: எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியதால், அந்நாட்டுக்கே இழப்பு என்றும், அது இந்தியாவிற்கான தொழில் வளர்ச்சிக்கு பெரும் நன்மை பயக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2000-5000 டாலராக இருந்த ‛எச்1பி' விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார். இது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாய். இந்த விதிமுறை இன்று (செப்.,21) அமலுக்கு வந்தது. இதனால் பல தொழில்துறையினர், ஐடி துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க வேலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை என டிரம்ப் தெரிவித்தார். ஆனால், டிரம்பின் இந்த முடிவு அமெரிக்காவின் புதுமை திறனைத் தடுப்பதாகவும், இந்தியாவுக்கு அது பெரும் நன்மை தரும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் இழப்பு, இந்தியாவின் லாபம்
முன்னாள் நிடி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: எச்1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தியது அமெரிக்காவின் புதுமையை சிதைக்கும்; இந்தியாவின் புதுமையை வேகப்படுத்தும். உலகளாவிய திறமைகளை தடுத்து நிறுத்துவதன் மூலம், ஆய்வகங்கள், காப்புரிமைகள், ஸ்டார்ட்அப்கள் அனைத்தும் பெங்களூரு, ஹைதராபாத், புனே, குர்கானுக்கு மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ஆப்ஷோரிங் அதிகரிக்கும்
இன்போசிஸ் முன்னாள் நிர்வாகியும் முதலீட்டாளருமான மோகன்தாஸ் பை கூறுகையில், ‛‛புதிய விண்ணப்பதாரர்கள் குறைவார்கள்; யாரும் ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை செலுத்த மாட்டார்கள். இதனால், அமெரிக்க நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்புகளை இந்தியாவுக்கு மாற்றுவார்கள். அடுத்த ஆறு மாதங்களில் இருந்து ஒரு ஆண்டுக்குள் ஆப்ஷோரிங் வேகமாக உயரும்'' என்றார்.
திறமைசாலிகள் இந்தியா திரும்புவார்கள்
ஸ்னாப்டீல் இணை நிறுவனர் குனால் பஹல், ‛‛புதிய விதிமுறைகளால் பல திறமையான நிபுணர்கள் இந்தியாவுக்கு திரும்புவார்கள். தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் திறமை அடர்த்தி (talent density) அதிகரிக்கும். 2007ல் என் எச்1பி விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அப்போதுதான் நான் இந்தியாவுக்கு திரும்பினேன். அது என் வாழ்க்கையை மாற்றியது” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் எதிர்ப்பு
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்த முடிவை, ‛‛இது பொறுப்பற்ற, துரதிர்ஷ்டவசமான முடிவு. அமெரிக்காவின் திறமையான வேலைவாய்ப்பு சூழலை பாதிக்கும்'' என்று விமர்சித்தார்.
இந்தியாவுக்கான வாய்ப்பு
நிபுணர்கள் கருத்துப்படி, அதிக கட்டணம் காரணமாக அமெரிக்காவுக்கு செல்லும் நிபுணர்கள் எண்ணிக்கை குறையும் நிலையில், பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு மற்றும் ஸ்டார்ட்அப் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும். எச்1பி விசா மீது அதிகம் சார்ந்திருக்கும் நிறுவனங்களில் அமேசான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 10,044 பேர் எச்1பி விசாவில் பணியாற்றுகின்றனர். அடுத்ததாக டிசிஎஸ் (5,505), மைக்ரோசாப்ட் (5,189), மெட்டா (5,123), ஆப்பிள் (4,202), கூகுள் (4,181) போன்ற நிறுவனங்கள் எச்1பி விசா மீது அதிகம் சார்ந்துள்ளன. அவர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிகாரிகள் இந்த நடவடிக்கை அமெரிக்க அரசியலில் முக்கியமாக பார்க்கப்பட்டாலும், நிபுணர்கள் எச்சரிப்பது வேறு. அமெரிக்காவின் போட்டித் திறன் குறையும்; இந்தியாவிற்கு மிகப்பெரிய நன்மையை கொடுக்கும் என்கின்றனர்.
இந்த கட்டண உயர்வு, புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே; ஏற்கனவே உள்ள எச்1பி விசாதாரர்களுக்கு பொருந்தாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.