தனியார் கைகளில் சுகாதாரத்துறை: ராகுல் குற்றச்சாட்டு
தனியார் கைகளில் சுகாதாரத்துறை: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : செப் 04, 2025 03:42 PM

புதுடில்லி: ''சுகாதாரத்துறை வேண்டும் என்றே தனியார் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பணக்காரர்களுக்கு மட்டுமே சிகிச்சை கிடைக்கிறது. ஏழைகளின் உயிரை அரசு மருத்துவமனைகளால் பாதுகாக்க முடியவில்லை,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை எலி கடித்துள்ளது. இதனால், காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தூர் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது விபத்து கிடையாது. இது கொடூர கொலை. இச்சம்பவம் கொடூரமானது. மனிதநேயமற்றது. இதைப்பற்றி கேட்டாலே நடுக்கம் ஏற்படுகிறது. அரசு தனது கடமையை நிறைவேற்ற தவறியதால், தாயின் மடியில் இருந்து குழந்தை வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை வேண்டும் என்றே தனியார் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பணக்காரர்கள் மட்டுமே சிகிச்சை கிடைக்கிறது. ஏழைகளின் உயிரை அரசு மருத்துவமனைகளால் பாதுகாக்க முடியவில்லை. மாறாக மரணக்குகைகளாக மாறிவிட்டன.
விசாரணை நடத்துவோம் என நிர்வாகம் எப்போதும்போல் சொல்கிறது. ஆனால், புதிதாக பிறக்கும் குழந்தை பாதுகாப்பை எப்போது உறுதி செய்வீர்கள், அரசை நடத்திச் செல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பததே தற்போது முக்கியமான கேள்வி?
பிரதமர் மோடியும், மபி முதல்வரும் தலை குனிய வேண்டும். நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஏழை மக்களின் சுகாதார உரிமையை உங்கள் அரசு பறித்துவிட்டது. இப்போது குழந்தைகள் தாய்மார்களின் மடியில் இருந்தும் பறிக்கப்படுகிறார்கள். அரசின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெற்றோர்களின் குரலாக இதனை பேசுகிறேன். இதற்கு பிரதமர் மோடியின் பதில் என்ன?
நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். ஒவ்வொரு ஏழை மக்கள், குடும்பம், குழந்தைகளுக்காக இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.