சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்; பீஹாரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ
சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்; பீஹாரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ
UPDATED : நவ 02, 2025 07:04 PM
ADDED : நவ 02, 2025 06:49 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வரும் 6ல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
ஒருபுறம், பிரதமர் மோடி போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அவர் காங்கிரஸ், ஆர்ஜேடி பீஹாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன என குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கிடையே தேஜ கூட்டணிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியை கடுமையாக சாடி பேசினார். மறுபுறம் பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து மீன்பிடித்து ஓட்டு சேகரித்தார்.
காலையிலிருந்தே பீஹார் தேர்தல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. தற்போது, மாலை நேரத்தில் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திறந்தவெளி வாகனத்தில் தாமரை சின்னத்தை காட்டியவாறு, மக்கள் அனைவரும் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

