நன்கொடை முறைகேடு அயோத்தியை விட்டு வெளியேற கோவில் ஊழியர்களுக்கு தடை
நன்கொடை முறைகேடு அயோத்தியை விட்டு வெளியேற கோவில் ஊழியர்களுக்கு தடை
UPDATED : ஜூன் 21, 2026 07:40 PM
ADDED : ஜூன் 21, 2026 07:31 PM

அயோத்தி:உத்தர பிரதேசத்தில், அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகளில் முறைகேடு நடந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் நிலையில், அயோத்தி நகரை விட்டு கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவிலை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகிக்கிறது. கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடுகள் நடந்ததாக, சமீபத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின.
இது குறித்து விசாரிக்க மாநில அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கடந்த சில நாட்களாக அயோத்தியில் முகாமிட்டு, அறக்கட்டளை நிர்வாகிகள், அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
சிறப்பு புலனாய்வுக் குழுவினர் லக்னோவுக்கு நேற்று புறப்பட்ட நிலையில், 'அயோத்தி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்கள் யாரும் அயோத்தியை விட்டு வெளியேறக் கூடாது' என, உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவில் நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகள், பிற நபர்களிடம் திரட்டப்பட்ட விபரங்கள் உள்ளிட்ட தினசரி புலனாய்வு அறிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் இறுதி அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
