தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டில்லி உஷ்: உள்குத்து!

டில்லி உஷ்: உள்குத்து!

டில்லி உஷ்: உள்குத்து!

2


UPDATED : மே 16, 2026 04:15 PM

ADDED : மே 16, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2026 04:15 PM ADDED : மே 16, 2026 03:42 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உள்குத்து!

தமிழக முதல்வர் விஜயின் தனிப்பட்ட அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அதன்பின் ஏற்பட்ட கடும் விமர்சனங்களால் பதவி நீக்கப்பட்டவர், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட். இவரை குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது இது தான். ஒரு முன்னாள் தி.மு.க., - எம்.பி., ஒரு பிரபல பா.ஜ., - எம்.பி.,க்கு, இந்த ஜோதிடரை அறிமுகம் செய்து வைத்தாராம். அந்த பா.ஜ., - எம்.பி.,யோ அத்வானிக்கு மிகவும் நெருக்கமானவர்.

உடனே அவர், அத்வானியிடம் இந்த ஜோதிடரை அழைத்து சென்றாராம். அத்வானியின் ஜாதகத்தை பார்த்த இந்த ஜோதிடர், 'அடுத்த பிரதமர் நீங்கள் தான்' என, அடித்து சொன்னாராம். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டவர் அத்வானி. ஜோதிடர் சொன்னதை கேட்டு மிகவும் ஆனந்தப்பட்டாராம். அத்வானியின் மகள் பிரதிபாவுக்கும் அப்பா பிரதமராக வேண்டும் என, விருப்பம். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இது நடந்தது.

கடந்த 2008ல், அமெரிக்காவுடன் மன்மோகன் அரசு அணு ஆயுத ஒப்பந்தம் செய்ததை எதிர்த்து, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். இதனால், 'மன்மோகன் அரசு கவிழும். பின், நீங்கள் தான் பிரதமர்' என, அத்வானியிடம் கூறி இருக்கிறார் விஜயின் ஜோதிடர்.

2008 ஜூலை 22ல், மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. 'ஜோதிடர் சொன்னபடி இந்த அரசு கவிழும். அப்பா பிரதமர் ஆவார்' என, நம்பிக்கையுடன் பார்லி., பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, சபை நடவடிக்கைகளை கவனித்தார் அத்வானியின் மகள் பிரதிபா. ஆனால், மன்மோகன் அரசுக்கு முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி ஆதரவளிக்க, நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார் மன்மோகன்.

'கவலைப்பட வேண்டாம். 2009 பார்லி., தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் பிரதமர் ஆவீர்கள்' என, மீண்டும் அத்வானியிடம் சொன்னாராம் ரத்தன் பண்டிட். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதற்கிடையே, டில்லியில் பல தொழிலதிபர்களுக்கு ஜோதிடம் சொல்லி இருக்கிறாராம்.

இப்போது, விஜயின் சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்டதில் கடும் வருத்தத்தில் உள்ளாராம் ஜோதிடர். த.வெ.க.,வில் உள்ள சிலருக்கு, இவரை பிடிக்கவில்லை. 'உள்ளே இருப்பவர்கள் தான், மீடியாவிற்கு என்னை பற்றிய விபரங்களை போட்டுக் கொடுத்து விட்டனர். இல்லையென்றால், தன்னை பற்றி யாருக்கும் அதிகமாக தெரியாது' என, நொந்து போயுள்ளாராம் ரத்தன் பண்டிட்.

***

முதல்வரை வரவேற்க தயாராகும் டில்லி!

இம்மாத இறுதியில், டில்லி வந்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பலரை சந்திக்க இருக்கிறார் தமிழக முதல்வர் விஜய். விமான நிலையத்திலிருந்து முதல்வர் தங்கும் தமிழக இல்லம் வரை, த.வெ.க.,வின் கொடிகளை கட்ட தொண்டர்கள் தயாராக உள்ளனர். அத்துடன், முதல்வரை வரவேற்று போஸ்டர்களும் அச்சடிக்கப்படுகின்றன. 400க்கும் மேற்பட்டவர்கள், டில்லியிலிருந்து தமிழகம் வந்து, 'விசில்' சின்னத்திற்கு ஓட்டளித்து உள்ளனராம். இவர்கள் அனைவரும், விஜயின் டில்லி வருகைக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும், டில்லியில் உள்ள தமிழ் அமைப்புகளும், முதல்வரை வரவேற்று பாராட்ட தயாராக உள்ளன.

டில்லியில் தங்கும் முதல்வர் விஜய், மத்திய அரசில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, மாலை சிற்றுண்டி அளிக்க இருக்கிறார். அப்போது, அவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என, சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், அமெரிக்கா உட்பட வெளிநாட்டு துாதர்கள், தமிழக முதல்வரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மாநில முதல்வரை, வெளிநாட்டு துாதர்கள் சந்திக்க வேண்டுமெனில், வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அமெரிக்க உட்பட பல நாட்டு துாதர்களும், வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனராம். தமிழக முதல்வரின் வெளிநாட்டு கொள்கை என்ன, அன்னிய முதலீடுகளை கொண்டு வருவதில் தமிழகத்தில் நிலை என்ன போன்றவற்றை தெரிந்து கொள்ள, இந்த துாதர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

***

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

'மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்படும். அதில், ஆறு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சரின் பதவிக்கும் வேட்டு' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு நடத்தப்படும், 'நீட்' தேர்வின் வினாத்தாள் வெளியானதால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ல், நீட் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ.,யும் விசாரிக்கிறது. இதற்கு மத்திய கல்வி அமைச்சரின் செயல்பாடு தான் காரணம் என, எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதுடன், அவர் பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர். கல்வி அமைச்சராக இருப்பவர், ஒடிஷாவைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான்.

'வினாத்தாள் கசிவு முதன் முறையல்ல... 2017, 2021 மற்றும் 2024ம் ஆண்டிலும் நடந்துள்ளது' என சொல்கிறார், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால்.

'அமைச்சர் பிரதான் தன் துறையை கவனிக்காமல், ஒடிஷா அரசியல் மீதே அதிக கவனம் செலுத்துவதால் நீட் தேர்வில் கோட்டைவிட்டு விட்டார்' என, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர்.

ஒடிஷா முதல்வராக வேண்டும் என்பது, பிரதானின் நெடு நாளைய ஆசை. ஒடிஷாவில் பா.ஜ., வெற்றி பெற்ற போது, தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என, காத்திருந்தார் பிரதான். ஆனால், மோகன் சரண் மஜியை முதல்வராக்கினார் மோடி. இந்த சூழலில், மத்திய அமைச்சரவை மாற்றப்படும் போது, தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவார் அல்லது அவரது துறை மாற்றப்படும் என, பா.ஜ., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

***

மம்தா கட்சியின் எதிர்காலம் என்ன?

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது, மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ். முதல்வராக இருந்த மம்தா, தன் சொந்த தொகுதியான பவானிபூரில், தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றார்.

மம்தாவின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி. இவர், திரிணமுல் கட்சியின் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். கட்சியின் நடவடிக்கைகளை இவர் தான் கவனித்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில், கட்சியின் பிரசார திட்டத்தை இவர் தான் தயார் செய்தார்.

'மம்தா என்கிற தனி நபரை மட்டுமே கட்சி சார்ந்திருக்கக் கூடாது; கட்சியின் கட்டமைப்புகள் சீராக இருந்தால் தான் வெற்றி பெற முடியும்' என்ற கருத்தில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாம். தேர்தல் வியூக நிறுவனமான, 'ஐ--பேக்' அபிஷேக் பானர்ஜியின் இந்த கருத்திற்கேற்ப தேர்தல் திட்டங்களை தயாரித்து செயல்படுத்தியதாம்.

இதனால் தான், மூத்த அமைச்சர்கள் உட்பட பலரும் தோற்றதுடன், கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என, கட்சிக்குள் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. இதற்கிடையே, ஏற்கனவே நிலுவையில் உள்ள பல ஊழல் வழக்குகள் வேகம் பிடிக்கும் என, தோற்றுப்போன அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். சி.பி.ஐ., - அமலாக்கத் துறை மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சர்களை விசாரித்து வருகின்றன.

நிலக்கரி ஊழல் வழக்கில், அபிஷேக் பானர்ஜியையும், அவரது மனைவியையும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரித்து வருகிறது. இனி மேல், இவர்களுக்கு பிரச்னை அதிகரிக்கும் என, தலைவர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

தமிழகத்தில் ஸ்டாலின் தோல்விக்கு காரணம், தேர்தல் வியூக நிறுவனமான, 'பென்' அமைப்பு என, தி.மு.க.,வினர் புகார் கூறியது போல, 'திரிணமுல் தோல்விக்கும், ஐ--பேக் மற்றும் அபிஷேக் தான் காரணம்' என்கின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள். கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையில் உள்ளனராம் திரிணமுல் நிர்வாகிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us