டில்லி அரசுப் பள்ளிகளில் விரைவில் அறிமுகமாகும் ஆர்எஸ்எஸ் பாடங்கள்; கல்வி அமைச்சர் அறிவிப்பு
டில்லி அரசுப் பள்ளிகளில் விரைவில் அறிமுகமாகும் ஆர்எஸ்எஸ் பாடங்கள்; கல்வி அமைச்சர் அறிவிப்பு
ADDED : அக் 01, 2025 08:38 AM

புதுடில்லி: டில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பற்றிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஆஷிஸ் சூட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
கடந்த 80 ஆண்டுகளில் நாட்டை கட்டமைத்ததில் ஆர்எஸ்எஸ் பங்கு மகத்தானது. தன்னார்வ சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பு. உலகின் பழமையான அமைப்பும் கூட.
எனவே, அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கையான ராஷ்டிரிய நீதி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பற்றிய பாடங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
இந்த பாடம், மாணவர்களிடையே சமூக உணர்வை வளர்ப்பதை நோக்கமாக கொண்டது. இந்த முயற்சி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்படுகிறது. பாட அட்டவணைகள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள பாட அட்டவணைகள் மற்றும் வகுப்புகள் பாதிக்கப்படாத வகையில் சனிக்கிழமைதோறும் இந்த பாட வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு கல்வி அமைச்சர் ஆஷிஸ் சூட் கூறினார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய பாடத்திட்டத்திற்கான ஆசிரியர் கையேடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எந்த வகுப்புகளுக்கு என்ன பாடங்கள் என்பது பற்றி இறுதி செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.
தலைநகர் டில்லியில் கிட்டத்தட்ட 1,100 அரசுப் பள்ளிகள் பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.