தேர்தலில் மன்மோகன் சிங்கை தோற்கடித்த பாஜ தலைவர் உடல்நலக்குறைவால் மறைவு!
தேர்தலில் மன்மோகன் சிங்கை தோற்கடித்த பாஜ தலைவர் உடல்நலக்குறைவால் மறைவு!
ADDED : செப் 30, 2025 09:33 AM

புதுடில்லி: டில்லியின் முதல் பாஜ தலைவரும், முன்னாள் எம்பியுமான விஜய்குமார் மல்ஹோத்ரா இன்று (செப்.30) காலமானார். அவருக்கு வயது 93.
பாஜ மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான விஜய்குமார் மல்ஹோத்ரா உடல் நலக்குறைவால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந் நிலையில், சிகிச்சை பலனின்றி விஜய்குமார் மல்ஹோத்ரா இன்று (செப்.30) காலமானார். அவரின் மறைவை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை செய்திக்குறிப்பு வழியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மறைந்த விஜய்குமார் மல்ஹோத்ரா, டில்லி பாஜவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர். பிரிட்டிஷ் இந்தியா காலக்கட்டத்தில் லாகூரில் 1931ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பிறந்தவர். 1972ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை டில்லி ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார். அதன் பின்னர் டில்லி பாஜவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 2 முறை டில்லி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர்.
டில்லி அரசியலில் பாஜவின் முகமாக அறியப்பட்ட விஜய்குமார் மல்ஹோத்ரா 45 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்றவர். 5 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். டில்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக திறம்பட செயலாற்றியவர். 2008ம் ஆண்டு டில்லி பாஜ முதல்வர் வேட்பாளராகவும் களம் இறக்கப்பட்டவர்.
1999ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர். 2004ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலில் டில்லி பாஜவில் இருந்து போட்டியிட்ட ஒரே தலைவரும் இவரே. கேதர்நாத் சாஹ்னி, மதன்லால் குரானா ஆகியோருடன் இணைந்து பாஜவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர்.
அரசியலையும் கடந்து தனிப்பட்ட முறையில் அனைத்து கட்சியினருடனும் நட்பாக பழகக்கூடியவர் என்ற பெயர் பெற்றவர். விஜய்குமார் மல்ஹோத்ராவின் மறைவு குறித்து டில்லி பாஜ தலைவர் விரேந்திரா சச்தேவ் கூறுகையில், கட்சியின் மூத்த தலைவரான அவரின் மறைவு பேரிழப்பு. எளிமை, பொதுவாழ்வில் தூய்மையின் அடையாளமாக திகழ்ந்தவர் என்று கூறியுள்ளார்.