நாட்டின் புல்லட் ரயில் சேவை 2029ல் செயல்பாட்டுக்கு வரும்: அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
நாட்டின் புல்லட் ரயில் சேவை 2029ல் செயல்பாட்டுக்கு வரும்: அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
ADDED : செப் 27, 2025 10:45 PM

புதுடில்லி: நாட்டின் புல்லட் ரயில் சேவை 2029ல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் 2029ம் ஆண்டில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும். நாட்டின் பிற பகுதிகளில் மேலும் 4 புல்லட் ரயில் சேவைக்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும். புல்லட் ரயில் பாதையில் சிறப்பு வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பலத்த காற்று, திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் ரயில் நிலையாக இருக்கும்.
செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மும்பைக்கும், ஆமதாபாத்துக்கும் இடையிலான தூரத்தை புல்லட் ரயில் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்களில் கடக்கும். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. முதல் புல்லட் ரயில் திட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது.
ரயில்களின் பாதுகாப்பான மற்றும் திறமையான இயக்கத்தை உறுதி செய்வதற்காக மிகவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த லட்சிய புல்லட் ரயில் திட்டம் மும்பை முதல் ஆமதாபாத் வரையிலான அனைத்து முக்கிய நகரங்களின் பொருளாதாரத்தையும் ஒன்றாக மாற்றும்.
முதல் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஜப்பானைப் போல வளர்ச்சியை உருவாக்கும். புதிய திட்டங்களுக்கான பணிகளை விரைவில் தொடங்குவோம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.