டில்லியை போர்த்தியுள்ள சாம்பல் நிற போர்வை காங்., பொதுச்செயலர் பிரியங்கா வர்ணனை
டில்லியை போர்த்தியுள்ள சாம்பல் நிற போர்வை காங்., பொதுச்செயலர் பிரியங்கா வர்ணனை
ADDED : நவ 03, 2025 01:39 AM

புதுடில்லி: “தலைநகர் டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
கேரளாவில் டில்லி வந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். டில்லி மாநகரை சாம்பல் நிற போர்வை போர்த்திருப்பது போல காற்று மாசு சூழ்ந்துள்ளது. காற்றில் நிறைந்துள்ள மாசுக்களால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், அரசியல் நிர்பந்தங்களைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து மக்களைக் காக்க, மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்து ஒத்துழைக்கும்.
டில்லி மக்கள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி வரை நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், முதியோர் மிகவும் அவதிப்படுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

