சுதந்திரத்திற்கு பின் பீஹாரில் முதல்முறை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்; ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பு
சுதந்திரத்திற்கு பின் பீஹாரில் முதல்முறை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்; ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பு
ADDED : செப் 24, 2025 01:30 PM

பாட்னா: பீஹார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள பீஹாரில் இன்று செயற்குழுக் கூட்டத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கிறது. காங்கிரசின் செயற்குழுக் கூட்டம் பீஹாரில் கடைசியாக 1940ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது தான் நடக்கிறது. கூட்டத்தில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பொருளாளர் அஜய் மேக்கான், பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், கேசி வேணுகோபால், பீஹார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் கார்கே பேசியதாவது;
நாடு மிகவும் சவாலான காலகட்டத்தில் உள்ள நிலையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. எனது நண்பர்கள் என்று டிரம்பை பிரதமர் மோடி பெருமையாக கூறினார். அதே நண்பர்கள் தான் இன்று இந்தியாவை ஏராளமான சிக்கல்களில் சிக்க வைக்கின்றனர்.
ஓட்டு திருட்டு பிரச்னையில் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மை கவலை அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து எழும் கேள்விகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் இருந்து அழுத்தம் வருகிறது. ஓட்டு அதிகார யாத்திரையின் போது ஏராளமான பொதுமக்கள் ராகுலுக்கு ஆதரவளித்தனர்.
நாடு இப்போது பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. மத அரசியலை பீஹார் மக்கள் விரும்பவில்லை. வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் நலன் குறித்த அரசியலையே விரும்புகின்றனர்.
இவ்வாறு கார்கே பேசினார்.