இந்திய நலன்களை பாதுகாப்பதில் உறுதி: வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்
இந்திய நலன்களை பாதுகாப்பதில் உறுதி: வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்
ADDED : செப் 18, 2025 09:59 AM

புதுடில்லி: ''இந்திய நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கை:
சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒப்பந்தத்தை முறைப்படுத்தும் இந்த முன்னேற்றம் பரிசீலனையில் உள்ளது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது.
நமது தேசிய பாதுகாப்புக்கும், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.