ADDED : செப் 24, 2025 10:35 PM

புதுடில்லி: முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 2026 மே மாதம் வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் மரணத்தை தொடர்ந்து அந்த பதவிக்கு அனில் சவுகான் கடந்த 2022 செப் மாதம் நியமிக்கப்பட்டார். ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அவர் செயல்படுவார் எனவும் அறிவித்து இருந்தது.
அவருக்கு இந்திய ராணுவத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் அவருக்கு நீண்ட அனுபவம் இருந்தது. பணியின் போது பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்(2020) உத்தம் யுத் சேவா பதக்கம்(2018), அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் ஆகிய பதக்கங்களை பெற்றவர் ஆவார். இந்நிலையில் அவரின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புததுறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக இருக்கும் அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் 2026 மே 30 அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது. ராணுவத்தில் 1981ம் ஆண்டு சேர்ந்த அவர், சிறப்பான பணியாற்றியதுடன், பல்வேறு பொறுப்புகளை நியமித்துள்ளார். பல பதக்கங்களை பெற்றுள்ளார். 2022 செப்.,30 முதல் முப்படை தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது