கட்சி அலுவலகத்தில் பாஜ கவுன்சிலர் தற்கொலை: கேரள அரசியலில் பரபரப்பு
கட்சி அலுவலகத்தில் பாஜ கவுன்சிலர் தற்கொலை: கேரள அரசியலில் பரபரப்பு
ADDED : செப் 20, 2025 02:55 PM

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜ கவுசின்சிலர் அனில்குமார், தனது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சியின் திருமலை வார்டு கவுன்சிலராக பாஜவை சேர்ந்த அனில்குமார் உள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் தனது கட்சி அலுவலகத்திலேயே துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்தவுடன் வந்து ஆய்வு செய்த போலீசார், தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,அனில் குமார் காலையில் அலுவலகத்தில் காணப்பட்டதாகவும் பின்னர் இறந்து கிடந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். நாங்கள் மற்றநடவடிக்கைகளை முடித்து வருகிறோம். அனில்குமார் உடலுக்கு அருகிலிருந்து தற்கொலை குறிப்பு கடிதத்தை மீட்டுள்ளோம். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையில், பாஜ மாவட்டத் தலைவர் வி.வி. ராஜேஷ் கூறியதாவது:
வங்கியில் உள்ள நிதி சிக்கல்கள் குறித்து அனில் குமார் கவலையில் இருந்தார்.எனக்கு தெரிந்தவரை, வங்கியில் பலர், தாங்கள் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். இதனால் அனில் குமார் மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.