அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கணும்: அமித்ஷா வேண்டுகோள்
அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கணும்: அமித்ஷா வேண்டுகோள்
ADDED : செப் 14, 2025 11:32 AM

புதுடில்லி: அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்க வேண்டும்.
நமது நாடு அடிப்படையில் ஒரு மொழி சார்ந்த நாடு. நமது மொழிகள் கலாசாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம் மற்றும் ஆன்மிகத்தை சார்ந்து உள்ளது. ஒன்றாக நடப்போம், ஒன்றாகச் சிந்திப்போம், ஒன்றாகப் பேசுவோம் என்பது இந்தியாவின் மொழியியல் கலாசார உணர்வின் முக்கிய மந்திரமாக உள்ளது.
வந்தே மாதரம்' மற்றும் 'ஜெய் ஹிந்த்' போன்ற முழக்கங்கள் நமது மொழியியல் உணர்விலிருந்து தோன்றி, சுதந்திர இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் அடையாளமாக மாறி உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றபோது, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மொழிகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விவாதித்து, செப்டம்பர் 14ம் தேதி 1949ம் ஆண்டு அன்று ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டனர்.
கடந்த பத்தாண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய மொழிகள் மற்றும் கலாசாரத்திற்கான மறுமலர்ச்சிக்கான பொற்காலம் உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேடையாக இருந்தாலும் சரி, ஜி20 உச்சிமாநாடாக இருந்தாலும் சரி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றினாலும் சரி, பிரதமர் மோடி ஹிந்தி உட்பட இந்திய மொழிகளின் பெருமையை எடுத்துரைத்து உள்ளார். 2014ம் ஆண்டு முதல், அரசுப் பணிகளில் ஹிந்தி பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.