ஈரானில் போர் பதற்றம் எதிரொலி இதுவரை 827 இந்தியர்கள் மீட்பு
ஈரானில் போர் பதற்றம் எதிரொலி இதுவரை 827 இந்தியர்கள் மீட்பு
ADDED : ஜூன் 22, 2025 01:14 AM
புதுடில்லி: போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கை வாயிலாக இதுவரை, 800க்கும் மேற்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்துகிறது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
'ஆப்பரேஷன் சிந்து'
இச்சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதற்கான பணிகளை ஈரான், அர்மேனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன.
முதற்கட்டமாக, ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் கடந்த 19ல், டில்லி வந்தடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஈரானின் டெஹ்ரானில் இருந்து 256 மாணவர்கள் மற்றும் புனித யாத்திரை சென்ற 34 பேர் என, 290 இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
எனினும், போர்சூழல் காரணமாக அங்குள்ள வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்ப, தங்கள் வான் எல்லையை பயன்படுத்த ஈரான் அரசு சிறப்பு அனுமதி அளித்தது. இதைஅடுத்து, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத மஷாத் நகருக்கு, 290 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் அவர்கள் டில்லி வந்தனர்.
இதேபோல், மற்றொரு விமானம் வாயிலாக 310 பேர் டில்லி வந்தனர்.
சிறப்பு விமானங்கள் வாயிலாக டில்லிக்கு நேற்று வந்த இந்தியர்களை கூடுதல் வெளியுறவு செயலர் அருண் சாட்டர்ஜி நேரில் வரவேற்றார்.
இதேபோல், துர்க்மெனிஸ்தானின் தலைநகர் அஸ்காபாதில் இருந்து இரண்டு சிறப்பு விமானங்கள் வாயிலாக 1,000 இந்தியர்கள், டில்லிக்கு இன்று அழைத்து வரப்பட உள்ளனர்.
நன்றி
இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க ஒத்துழைப்பு வழங்கிய ஈரான், அர்மேனியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்த வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 'ஆப்பரேஷன் சிந்து' வாயிலாக இதுவரை, 827 இந்தியர்களை மீட்டுள்ளதாக குறிப்பிட்டார்.