கேரளா காடுகளில் 7 ஆண்டுகளில் 827 யானைகள் உயிரிழப்பு
கேரளா காடுகளில் 7 ஆண்டுகளில் 827 யானைகள் உயிரிழப்பு
ADDED : செப் 03, 2025 09:28 AM

கொச்சி: கேரளா காடுகளில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 827 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
கேரளா காடுகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையாக மரணம் அடைந்தாலும் சில யானைகள் மனித தாக்குதல் மற்றும் தொந்தரவு ஆளாகி உயரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 827 காட்டு யானைகள் இறந்துள்ளன என கேரள வனத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
அவற்றில் 84 யானைகள் உயிரிழப்புகளுக்கு மனித தாக்குதல் காரணமாக இருந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையான காரணங்களால் இறந்தாலும், காட்டில் வசிக்கும் மனித தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் நிலவுகிறது. சில யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கின்றன.
வெடிபொருட்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் பூசப்பட்ட அன்னாசி போன்ற பழங்களை சாப்பிட்டு யானைகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. மனித வாழ்விடங்களுக்கு வழி மாறியோ அல்லது உணவு தேடி வரும்போது காட்டு யானைகள் உள்ளூர் கிராமவாசிகளால் துன்புறுத்தப்படுகின்றன.
கடந்த கால நிகழ்வுகள்….!
2019ம் ஆண்டில் மனித தாக்குதல் மற்றும் தொந்தரவுக்கு ஆளாகி 12 யானைகள் இறந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டில் 18 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா காடுகளில் காட்டு யானைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயிரிழக்கும் சம்பவங்கள் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.