டில்லியில் குற்றவாளிகளை தேடி 500 போலீசார் நள்ளிரவு வேட்டை: 63 பேர் கைது, 15 துப்பாக்கிகள் பறிமுதல்
டில்லியில் குற்றவாளிகளை தேடி 500 போலீசார் நள்ளிரவு வேட்டை: 63 பேர் கைது, 15 துப்பாக்கிகள் பறிமுதல்
ADDED : செப் 20, 2025 10:11 AM

புதுடில்லி; புதுடில்லியில் ஒரே இரவில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் 63 குற்றவாளிகள் சிக்கி உள்ளனர். மொத்தம் 15 கைத்துப்பாக்கிகள்,கொகைய்ன், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களும் சிக்கின.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தெற்கு டில்லியில் நேற்றிரவு போலீசார் பல குழுக்களாக பிரிந்து சென்று தணிக்கையில் இறங்கினர். இந்த ரெய்டுக்காக மொத்தம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி அதிகாரி நியமிக்கப்பட்டு, காவலர்களும் ரெய்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று ஒரே இரவில் தெற்கு டில்லி முழுவதும் ரெய்டில் இறங்கினர்.
நகரின் முக்கியமான பகுதிகள், வணிக வளாகங்கள், தங்குமிடங்கள் என ஒவ்வொரு பகுதியையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரெய்டில் 63 குற்றவாளிகள் சிக்கினர். இவர்கள் அனைவரும் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்.
63 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர். ரெய்டில் மொத்தம் 16 கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், கொகைய்ன், ஹெராயின் உள்ளிட்ட ஏராளமான போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
பிடிபட்டவர்களுடன் தொடர்பில் இருந்து தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களையும் தேடி பிடித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் டில்லி போலீசார் களம் இறங்கி உள்ளனர்.