12 பொருட்களுக்கு மட்டுமே 40% வரி! 5 மற்றும் 18% வரி பலனை மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
12 பொருட்களுக்கு மட்டுமே 40% வரி! 5 மற்றும் 18% வரி பலனை மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
UPDATED : செப் 03, 2025 09:06 PM
ADDED : செப் 03, 2025 03:53 AM

சென்னை: “இப்போது, 5, 12, 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., 5, 18, 40 என, மூன்று அடுக்குகளாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும்,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஜவுளித்துறை தொழிலதிபர்களுடன், சென்னையில் நேற்று அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகி விட்டதால், அதிலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ள வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
சாத்தியம் அதன் அடிப்படையில், அனைத்து தரப்பினருக்கும், அனைத்து பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், புத் தம் புதிதாக ஜி.எஸ்.டி., விதிப்பு மாற்றி அமைக்கப்பட உள்ளது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே, ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் செய்வதற்கான பணிகள் துவங்கி விட்டன. இன்றும், நாளையும் நடக்கும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு சில முன் மொழிவுகளை முன் வைக்க உள்ளது. அதில், ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தீர்வு இருக்கும்.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்கள், நடுத்தர மக்கள் வாங்கும் கார், பிரிஜ் போன்ற பொருட்களின் விலை குறையும் வகையில், ஜி.எஸ்.டி.,யில் மாற்றங்கள் இருக்கும். விலையை குறைப்பதோடு, வரி விதிப்பு முறையும் எளிதாக்கப்படும்.
அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விதிப்பு சாத்தியம் இல்லாததால், மூன்று அடுக்குகளாக வரி விதிப்பு இருக்கும்; 5 சதவீத வரி தொடரும்; 12 சதவீத வரி நீக்கப்படுகிறது. 12 சதவீத வரி விதிப்பில் இருக்கும் 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரிக்குள் வந்துவிடும்.
சில உணவு பொருட்கள் பூஜ்ஜியம் சதவீதத்திற்கு வந்துவிடும்; 28 சதவீத வரியும் இருக்காது. இதிலுள்ள, 90 சதவீத பொருட்கள், 18 சதவீதத்திற்கு வந்து விடும். இந்த அளவுக்கு வரி குறைப்பு என்பது, இந்திய வரலா ற்றிலேயே இதுவரை நடந்ததில்லை.
நாளை அறிவிப்பு
இந்த அளவுக்கு வரி குறைப்பு சாத்தியமா என்று கேட்கலாம். பிப்ரவரி 1ம் தேதி தாக்கலான பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான பொருட்கள், 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.
வரி குறைப்பில், இது வரலாற்று புரட்சி. 28 சதவீத வரியில் இருக்கும் 12 பொருட்கள், 40 சதவீத வரிக்குள் கொண்டு வரப்படும். 40 சதவீத வரியா என்று கேட்கலாம். ஆனால், இந்த பொருட்களுக்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன், 88 சதவீதம் வரி இருந்தது. இப்போது, 40 சதவீதத்திற்குள் வருகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்
ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலன்கள், மக்களுக்கு சென்று சேரும் வகையில், தொழில், வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். வரி குறைப்பின் பலன் தங்களுக்கு கிடைக்கவில்லை எனில், மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். - நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்