இளைஞர்களின் நம்பிக்கையை உடைக்கும் அரசு: ராகுல் குற்றச்சாட்டு
இளைஞர்களின் நம்பிக்கையை உடைக்கும் அரசு: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : செப் 23, 2025 03:20 PM

புதுடில்லி: '' இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து, அவர்களை நம்பிக்கை அற்றவர்களா மாற்றுவது இந்த அரசின் அடையாளமாக மாறிவிட்டது,'' , என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை. இது நேரடியாக ஓட்டுத் திருட்டுடன் தொடர்பு உடையது. மக்களின் நம்பிக்கையுடன் ஆட்சிக்கு வரும் அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதை முதல்வேலையாக செய்ய வேண்டும். பாஜ நேர்மையாக தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஓட்டுகளை திருடியும், அமைப்புகளை கைப்பற்றியும் அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதனால் தான் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உச்சத்தை தொட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஆட்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்துள்ளன. இளைஞர்களின் எதிர்காலம் இருளில் தள்ளப்படுகிறது. ஒவ்வொரு வினாத்தாள் கசிவு மற்றும் ஒவ்வொரு ஆட்சேர்ப்பும் ஊழல் கதைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. நாட்டின் இளைஞர்கள் கடினமாக உழைத்து கனவுகளுடன் எதிர்காலத்துக்காக போராடி வருகின்றனர். ஆனால், மோடி தனது விளம்பர மேனேஜருடன் பிசியாக உள்ளார். இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து அவர்களை நம்பிக்கை அற்றவர்களாக மாற்றுவது இந்த அரசின் அடையாளமாக மாறிவிட்டது.
தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இளைஞர்கள் உண்மையை உணர துவங்கிவிட்டனர். தங்களது உண்மையான போராட்டம் வேலைவாய்ப்புக்காக அல்ல. ஓட்டுத்திருட்டுக்கு எதிரானது என தெரிந்துவைத்துள்ளனர். தேர்தல்கள் திருடப்படும் வரை, வேலைவாய்ப்பின்மையும் ஊழலும் அதிகரித்து கொண்டே இருக்கும். இப்போது இளைஞர்கள் வேலைகள் சூறையாடப்படுவதையோ அல்லது ஓட்டுகள் திருடப்படுவதையோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வேலையின்மை மற்றும் ஓட்டுத்திருட்டில் இருந்து இந்தியாவை விடுவிப்பது தான் மிகப்பெரிய தேசபக்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.