ஹார்முஸ் ஜலசந்தி அருகே மற்றொரு இந்திய கப்பல் மீது தாக்குதல்; 21 பேர் பத்திரமாக மீட்பு
ஹார்முஸ் ஜலசந்தி அருகே மற்றொரு இந்திய கப்பல் மீது தாக்குதல்; 21 பேர் பத்திரமாக மீட்பு
UPDATED : ஜூன் 10, 2026 10:48 PM
ADDED : ஜூன் 10, 2026 10:41 PM

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே மற்றொரு இந்தியக் கப்பல் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பேர் மாயமாகி உள்ளனர்.
மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த, 8ம் தேதி, ஓமன் அருகே, கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீப்பிடித்த கப்பலில் இருந்த, 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில், ஓமன் அருகே, இன்று மற்றொரு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்டது. ஓமன் கடற்படையின் உதவியுடன், மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்தக் கப்பலில், 28 மாலுமிகள் இருந்தனர்; அதில், 24 பேர் இந்தியர்கள். தீப்பிடித்த கப்பலில் இருந்து, 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், மாயமான மூன்று பேரை தேடி வருகின்றனர்.
யார், எங்கிருந்து இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தினர் என்ற தகவல் தெரியவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நம் வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
