சத்தீஸ்கரில் என்கவுன்டர் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் என்கவுன்டர் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை
ADDED : செப் 12, 2025 07:49 AM

ராய்ப்பூர்; சத்தீஸ்கரின் கரியாபான்ட் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 நக்சல்கள் கொல்லப் பட்டனர்.
சத்தீஸ்கர் மாவட்டம் கரியாபான்ட் மாவட்டத்தில் மெயின்பூர் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான மோடம் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு போலீசாரும் திருப்பி சுட்டனர். இரு தரப்புக்கும் நடந்த மோதலில் மூத்த நக்சல் பாலகிருஷ்ணா உட்பட 10 நக்சல்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மூத்த நக்சல் பாலகிருஷ்ணா 1980களில் நக்சல் இயக்கத்தில் சேர்ந்தார்.
இவர் ஒடிஷா மாநில மாவோயிஸ்ட் குழு செயலராக இருந்தார். 10 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தை அடுத்து இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் பல்வேறு என்கவுன்டர்களில் 241 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இதில் பஸ்தான் டிவிசனில் மட்டும் 212 நக்சல்கள் பலியாகினர்.